“அப்பாவின் நினைவு நாளில் நீளம் தாண்டினேன்” – 40 ஆயிரம் கடன் வாங்கி சென்று வெள்ளி பதக்கம் வென்ற வீரரின் கதை!
பரபரப்பான லால்குடி சாலையின் ரவுண்டானா அருகே நாலுக்கு நாலு அகலமுள்ள ஒரு குடிசை வீடு. 40 ஆயிரத்தை கடன் வாங்கிக்கொண்டு ரயில் ஏறிய கால்கள் பூடான் நாட்டில் வெள்ளி பதக்கத்தோடு வீடு திரும்பியது.

ஆம், தன் அப்பா இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் பூடான் நாட்டில் நீளம் தாண்டுதல் கலந்துகொண்டு கண்ணீருடன் தான் கடந்து வந்த பாதையை நினைத்து நீளம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் இந்த இளைஞர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் சாதனைக்கு பின்பும் ஒரு சோதனை கதைகள் மறைந்து தான் இருக்கிறது. காலை முழுவதும் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து நெருக்கடியான சூழ்நிலையில் மைதானத்திற்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு பலரிடம் கேலி கிண்டல்களை எல்லாம் வாங்கி, தான் அணிய ஒரு “சூ” கூட இல்லாமல் தொடர் முயற்சியால் வெற்றியை வசமாக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்று வீடு திரும்பினார் லால்குடியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது என்ற 21 வயது மாணவர்.
“வெற்றிக்கு முன் வீண் முயற்சி என்பார்கள் ஆனால், வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி” என்பார்கள். இப்போது சாகுல் ஹமீது நடப்பதும் அதுவேதான்! விளையாட்டுகள் என்பது நம் வாழ்வோடு ஒன்றிணைந்த ஒன்று. தடகளமோ, குழு விளையாட்டோ ஏதாவது ஒன்றில் நாம் அனைவருமே சிறந்து விளங்க கூடியவர்கள் தான். விளையாட்டு ஒன்றை மட்டுமே நம்பி 40 ஆயிரம் ரூபாயை தன்னால் இயலும் முடியாத சூழ்நிலையிலும் வேறு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு கடன் வாங்கி பூடான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாட கிளம்பினார் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது(21).

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக போட்டியில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்றார். 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு பெற்று சர்வதேச அளவிற்கு தேர்வாகி தெற்காசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 7 நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சாகுல் ஹமீது நீளம் தாண்டுதலில் 2வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், விடாமுயற்சி ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு லால்குடி அருகே உள்ள அரசு கல்லூரியில் படித்து அவருடைய தாய் சமீம் அரவணைப்பில் இன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இன்று லால்குடி பகுதியில் கட் அவுட்டுகள் அடித்து சாகுல் ஹமீதை கொண்டாடி வருகின்றனர். ஒருபுறம் சாகுல் ஹமீது கொண்டாடி வந்தாலும் மறுபுறம் குடும்பத்தின் ஏழ்மையும், மீளா துயரும் அவரை விட்டு விலகியதாக தெரியவில்லை.

இதுகுறித்து சாகுல் ஹமீது தாய் சமீம் கூறுகையில்…. “என்னுடைய பையன் ரொம்ப கஷ்டப்பட்டு நேபாள போட்டியில் கலந்துகொண்டான். வீட்டில் இருக்கும்போது கூட வேலைக்கு சென்று வந்த காசை கேஸ் மற்ற பொருள்கள் வாங்கி வந்து தருவான். அவருடைய அப்பா இறந்தது முதல் குடும்பத்தை கவனித்து வருகிறான். பூடான் நாட்டிற்கு தேர்வாகி 40 ஆயிரம் உதவிக்காக பலரை அனுகினோம். கடைசியில் பலன் கிடைக்காததால் கடன் வாங்கி, பூடான் நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். என் மகன் சொன்னது போலவே வெள்ளிப் பதக்கம் வாங்கி வந்தான். ரொம்பவும் பெருமையாக இருக்கிறது” என்றார்

மேலும் இதுகுறித்து ஷாகுல் ஹமீதை கூறுகையில்…. “அப்பா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. அம்மாதான் ஃபுல் சப்போர்ட் பண்ணி என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தாங்க… அரசு கல்லூரியில் படிக்கும்போதே லால்குடி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து தினமும் பயிற்சி பெற்று வந்தேன். என்னுடைய பயிற்சியாளர் ராமச்சந்திரன் தான் இதற்கு காரணம். தினமும் என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் நான் சென்றதற்கு அவர் தான் காரணம்.

இதற்காக ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் கேட்டு இருந்தார்கள். இவ்வளவு பெரிய தொகையை என்னால் நிச்சயமாக கிடைக்க முடியுமா என சந்தேகம் இருந்தது. இருப்பினும் என் தாயார் மற்றும் பலரின் முயற்சியால் தற்போது 40 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே “திருச்சி ஆப்பிள் மில்லட்” நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது தனக்கு உதவுவதாகவும் தெரிவித்தனர். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கு பூடான் சென்றவுடன் சரியாக என் தந்தை இறந்த நாளிலேயே நான் நீளம் தாண்டுதல் போட்டியில் விளையாட உள்ளதாக அறிவிப்பு வந்தது, கண்களெல்லாம் கலங்கிவிட்டன. ஏற்கனவே அம்மா “ஏன்டா, முதல் வருடம் அப்பாவின் நினைவு நாளில் கூட நீ இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் நான் நிச்சயமாக அப்பாவின் நினைவு நாளில் பதக்கம் வெல்வேன்” அம்மா என்று கூறி சென்றேன் அதேபோலவே வெள்ளி பதக்கம் வென்றேன்.
எல்லோ விளையாட்டு வீரர்களுக்கும் இருக்கும் கனவுதான் ஒலிம்பிக்கில் எப்படியாவது தேர்வாகி செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தற்போது நாங்கள் இங்கு மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறோம். தினமும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று கிடைக்கும் 100 ரூபாயை வைத்து என்னுடைய குடும்பத்தை நடத்தி வருகிறேன். அரசாங்கம் சார்பில் ஏதாவது உதவி கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்
குடும்பத்தின் நிலைமை ஒருபுறம் இருந்தாலும் விடா முயற்சி ஒன்றை மட்டுமே விடாது பிடித்துச் செல்லும் இதுபோல் இளைஞர்கள் கண்டிப்பாக உச்சத்தை அடைவார்கள் என்பதே நிதர்சனம்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8