காவிரியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம், மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்படுவதால், முக்கொம்பு மேலாணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முக்கொம்பு மேலணையிலிருந்து இன்று (26.08.2022) இரவு 8.00 மணிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி உபரி நீர் திறந்துவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்தைப் பொறுத்து, படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள காரணத்தினால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவிரி, கொள்ளிடம் சார்ந்த நீர்நிலைகளில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்காகவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” (Selfie) எடுக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,தெரிவித்துள்ளார்