ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆட்டு கொட்டகையில் 36 மூட்டைகளில்பதுக்கி வைத்திருந்த ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது.
தச்சங்குறிச்சி பகுதியில் குட்கா பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தச்சங்குறிச்சி நால்ரோடு பகுதியில் சிறுகனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது காரின் பின்புறம் பகுதியில் 5 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.பின்னர் கடத்தி வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தச்சங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் 33 வயதான மணிராஜ் என தெரியவந்தது.மேலும் விசாரணையில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகையில் 36 மூட்டைகளில் குட்கப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.இதில் ஹான்ஸ் 1,150 பண்டல்களும்,கூலிப்,425 பண்டல்களும்,விமல் பாக்கு 52 பண்டல்களும் இருந்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து குட்கா பொருட்களை சிறுகனூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ. 5.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மணிராஜை கைது செய்தனர்.