குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வரும் 12ந்தேதி திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

0 939
Stalin trichy visit

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வரும் 12ந்தேதி திறக்கப்படுமா?குறுவை சாகுபடிக்கு வரும் 12ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் சுமார் 95 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அல்லது சில வாரங்களில் அணைக்கு கணிசமான அளவு தண்ணீர் வருவதற்கான வாய்ப்புள்ளது என்ற நிலை இருந்தால் ஜூன் 12ந்தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும்.மேட்டூர் அணை திறப்பு மூலம் சுமார் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.தொடர்ந்து கர்நாடகம், கேரளா மற்றும் தமிழகத்திலும் பருவமழை நன்றாக பெய்ததால் குறுவை, தாளடி, சம்பா அமோக மகசூல் கண்டது. இந்த ஆண்டும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டுமென்று டெல்டா வேளாண் வல்லுநர் குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 3 அடி தண்ணீர் குறைவாக உள்ளது.அதேபோல மேட்டூர் அணைக்கு நீர் தரும் கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் அணையிலும் கடந்த ஆண்டை விட நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 1ந்தேதி கேஆர்எஸ் அணையில் சுமார் 92 அடி தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 49.45 அடி தண்ணீர் தான் உள்ளது.அதேநேரத்தில் கபினியில் தற்போது 45.39 அடி தண்ணீர் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 அடி அதிகம் தான்.கேஆர்எஸ், கபினி ஆகிய இரு அணைகளிலும் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. கேஆர்எஸ்ஸில் மூன்றில் ஒரு பங்கும், கபினியில் இரண்டில் ஒரு பங்கும் தண்ணீர் இருப்பு உள்ளது.ஜூன் 3ந்தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஒரு வாரத்திலோ, 10 நாட்களிலோ கர்நாடகத்திலும் மழை தொடங்கும். இரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து அணை நிரம்புவதற்கு இந்த மாத கடைசி ஆகிவிடும். மழைப்பொழிவு குறைவாக இருந்தால் அணைகள் நிரம்ப மேலும் தாமதம் ஆகலாம். கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே அந்த மாநிலம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும். ஜூன் மாதத்தில் காவிரியில் தமிழகத்தின் பங்கு 9.19 டி.எம்.சி தான்.வேளாண் வல்லுநர் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க வரும் 12ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் 30ந்தேதிக்குள் மேட்டூர் அணையிலிருந்து 20 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டியதிருக்கும். ஆனால் டெல்டா விவசாயிகள் நடவோ, நேரடி விதைப்போ தொடங்க ஜூலை 2வது வாரம் ஆகிவிடும். அதற்குள் மேலும் 10 டி.எம்.சி திறக்க வேண்டியதிருக்கும்.தற்போது மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. இது அணை திறப்பதற்கு போதுமானது தான். ஆனால் அணைக்கு நீர்வரத்து திருப்தியாக இல்லை.தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் மிதமாக இருக்குமா அல்லது அதிக மழை தருமா என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் இன்னும் சரியான அறிவிப்பு வெளியிடவில்லை. மேற்கண்ட அம்சங்களை அலசி ஆராய்ந்து அணை திறப்பு தேதி குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும். அந்த நாளுக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.