கலைஞர், அன்பில் தர்மலிங்கத்துக்கு சிலை: மாமன்ற உறுப்பினர் வேண்டுகோள்
திருச்சி, மே 30 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கலைஞருக்கும், முன்னாள் அமைச்சர் மறைந்த அன்பில் தர்மலிங்கம் ஆகியோருக்கு மாநகராட்சி கூட்டம் அரங்கில் சிலை வைக்க மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் வேண்டுகோள் விடுத்தார்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பேசுகையில், நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இன உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக விளங்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அரும்பாடுபட்டு நல்லதொரு தீர்ப்பை பெற்று தந்த நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த மாமன்றத்திலே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பில் மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை ஒரு மாபெரும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்று வளர்ச்சி பெற்ற நாடாக கொண்டு சென்ற நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞருக்கும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்த போது திருச்சிக்கு பல நல்ல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, அனைவராலும் சர்வக்கட்சி தலைவர் என்று அழைக்கப்பட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரோடு இணைந்து மக்கள் பணியாற்றிய அன்பில் தர்மலிங்கத்துக்கும் மாநகராட்சி மெயின் அலுவலகம் வளாகத்தில் சிலை அமைத்திட வலியுறுத்துகிறேன்.
அரிஸ்டோ பாலத்தை வெகு விரைவில் திறப்பதற்கு முழு முயற்சி செய்திட்ட அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையருக்கும், இந்த மாமன்றத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதோடு ஒன்றரை ஆண்டு காலமாக எனது வார்டுக்கு மாநகர தந்தை (மேயர்) வரவில்லை என்பதை மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். மாநகராட்சி ஆணையர் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவருக்கு எனது வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வார்டில் சத்துணவு கூடம் கட்டுவதற்கும், முருகன் கோயில் தெருவில் இருந்த தண்ணீர் டேங்க் இடித்துவிட்டதால் புதிய தண்ணீர் டேங்க் அமைத்து தர வேண்டுகிறேன் என்று கூறினார்.