கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற இளம்பெண் கைது

0 282
Stalin trichy visit

திருச்சி காட்டுப்புத்தூர் அருகே சீலைப்பிள்ளையார் புத்தூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திருச்சி அருகே உள்ள லால்குடி வட்டம் கூத்தூர் சேர்ந்த ராஜகோபால் மனைவி வசந்தா(50) என்பவர் கலந்துகொண்டு கூட்டத்தில் நின்றிருந்தார். அப்போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை விளையாட்டு பொம்மைகள் விற்பனை செய்யும் இளம்பெண் ஒருவர் பறித்துள்ளார்.

உடனே சுதாரித்துக்கொண்ட வசந்தா தனது செயினை பறித்த பெண்மணியை கையும் களவுமாக பிடித்து கும்பாபிஷேக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்டுப்புத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து காட்டுப்புத்தூர் போலீசார் தங்கச் செயினை பறித்த இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தப் பெண் நாகர்கோவில் அருகிலுள்ள ஒழுகனசேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி சத்யா (28) என்பதும், இவர் திருவிழா மற்றும் விழாக்கள் நடக்கும் இடங்களில் குழந்தைகள் விளையாடும் பொம்மை கடை வைத்து பொம்மை வியாபாரம் செய்து வருபவர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.