குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் தாயை அடித்து கொலை செய்த கணவர் தலைமறைவு

0 411
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆர்.கோம்பை வடக்கு போயர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(32). இவரது மனைவி புஷ்பவள்ளி என்கிற லட்சுமி(24). இவர்களுக்கு மேத்ரா(6), புனிதா(4) என்ற 2 பெண் குழந்தைகளும், மோனிக்ராஜ்(1) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கோயம்புத்தூரில் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்ததில் இருந்தே கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதலே, பூட்டிக்கிடந்த பெரியசாமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்த தெருமக்கள் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் பெரியசாமியின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது புஷ்பவள்ளி கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் விசாரணை நடைபெற்றது.

குடும்பத்தகராறின் காரணமாக புஷ்பவள்ளி கொலை செய்யப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. கடந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து சொந்த ஊரான கோம்பைக்கு வந்த தம்பதியினரிடையே, செப்டம்பர் 1ம் தேதி புதன்கிழமை மாலை தகராறு நடந்ததாகவும், அப்பொழுது புஷ்பவள்ளியின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

மனைவியை கொலை செய்து விட்டு, போர்வையால் மூடி வைத்துவிட்டு, பெரியசாமி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அழுகிய நிலையிலிருந்த புஷ்பவள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.