துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குற இன மக்கள் ! மயான வசதி வேண்டி கோரிக்கை !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் காலனியில் அடிப்படை வசதிகளான மயான வசதி, சுகாதார வளாகம், குடிநீர் வசதி , தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் , கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி , முசிறி பிரிவு ரோட்டில் உள்ள நரிக்குறவர் காலனியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆண், பெண் என 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .தகவல் அறிந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி , அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் .அடிப்படை வசதிகள் கேட்டு சுமார் 3 கி.மீ தூரம் வரை நரிக்குறவர் இன மக்கள் ஊர்வலமாக வந்ததால் துறையூர் திருச்சி சாலை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.