ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ – ராசாத்தி தம்பதியினர். இவர்கள் தங்களது இரு குழந்தைகள் உடன் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் உயர்ஜாதி வகுப்பைச் சேர்ந்த வடிவேல், என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்களை ஏவிவிட்டு அவ்வப்போது ராசாத்தியின் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார். நாய் கடிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டில் உள்ள உணவுப் பண்டங்களையும் தின்று வந்ததால், இருகுடும்பத்தினரிடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி வடிவேலுவின 10 வயது மகன் ராசாத்தியின் மகன் மீது சிறுநீர் கழித்ததாகவும் அதனை கேட்க சென்ற போது வடிவேல் குடும்பத்தினர் இளங்கோ – ராசாத்தி குடும்பத்தினரை ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 ம் தேதி ராசாத்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் கடந்த 5 ம் தேதி ராசாத்தி புகார் அளித்தார். இப்பிரச்சினையால் விடத்திலாம்பட்டியில் இருந்து இளங்கோ தனது குடும்பத்தினருடன் போடுவார்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்குச் சென்று தற்போது அங்கு தற்காலிகமாக வசித்து வருகிறார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வடிவேல் ( 45), அவரது மனைவி அழகுமணி ( 37) மற்றும் இவர்களது மகன்கள், மகள் ( 18 வயதிற்குட்பட்டவர்கள்) என 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.