குண்டூர் ஏரியில் குறுங்காடு: அமைச்சர் அன்பில் மகேஸ் மரக்கன்று நட்டார்
திருச்சி, நவ. 3 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், குண்டூர் ஏரியை சீரமைத்து வரும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நேரில் பார்வையிட்டு குறுங்காடுகள் ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், குண்டூர் ஏரி 377 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இதன் மூலம் குண்டூர், கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 627 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு புதிய மேடு கட்டளை வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து சேர்வதுடன் மழைக்காலங்களில் பெய்யும் வாரி தண்ணீரும் இந்த ஏரியில் வந்து சேர்கிறது. இந்த நிலையில் இந்த ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமா மெகா பவுண்டேஷன் என்னும் தனியார் அமைப்பு திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் கரை அமைப்பது, குளத்தின் கரையை சுற்றி பலப்படுத்துவது குறுங்காடு அமைப்பது மற்றும் குளத்தைச் சுற்றி கரைகளில் பனை விதைகளை விதைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறினார்.
அதனடிப்படையில், இன்று குண்டூர் ஏரியில் குறுங்காடுகள் உருவாக்கிடும் வகையில் மண் திட்டுகள் அமைத்து அதில் மரக்கன்றுகளை அமைச்சர் அவர்கள் நட்டு வைத்து, குறுங்காடுகள் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.