தேசிய அளவில் தனிக்கவனம் பெற்றுள்ள வி.சி.க. மாநாடு
மதசார்பற்ற நாடு என்ற இந்தியாவின் தனிப்பெரும் சிறப்பை, சனாதனத்தின் மூலம் சிதைத்துவரும் பாஜகவுக்கு, 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முடிவுரை எழுதுவதற்கான சிறப்பானதொரு தொடக்கமாக அமையவுள்ளதுதான் விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு, தேசிய அளவில் தனிக்கவனம் பெற்றுள்ளது.
மாநாட்டின் பெயருக்கேற்ப, மாநாட்டு அரங்க நுழைவாயில் பழைய நாடாளுமன்ற கட்டிட வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதன் முகப்பில் புத்தரும் அம்பேத்கரும் வரவேற்பதை போல் அவர்களின் திருவுருவப் படங்கள் பளிச்சென ஒளிர்கின்றன. நுழைவாயில் முகப்பின் இடதுபுறம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. வலதுபுறம் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கட்சியின் கொள்கைகள் ரத்தின சுருக்கமாக பொறிக்கப்பட்டுள்ளன.
கவனம் ஈர்க்கும் நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றால், ஏக்கர் கணக்கில் பரந்துவிரிந்திருக்கும் மாநாட்டு திடல் மலைக்க வைக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருகைதரும் லட்சக்கணக்கான விசிக தொண்டர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் விதத்தில் தயாராகி உள்ள மாநாட்டு திடலின் நாலாபுறமும் வாயனுயர நிற்கும் மின்னொளியில் பட்டொளி வீசி பறக்கின்றன விசிக கொடிகள். அவற்றுக்கு நடுவே மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜூன் கார்கே, சீதாராம் யெச்சூரி, வைகோ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆளுயர கட்-அவுட்கள் மாநாட்டுக்கு வருபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.இவ்வளவு பிரமாண்ட ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக மேற்கொண்டுவருகிறது வாய்ஸ் ஆஃப் காமென் என்கிற நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜூனா தான் கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக விசிகவின் விருது வழங்கும் விழா, விசிக சமீபத்தில் பிரமாண்டமாக நடத்திய பூத் ஏஜென்ட் கூட்டம் உள்ளிட்டவற்றை திட்டமிட்டு ஒருங்கிணைத்து வந்தவர். அவரது தலைமையிலான இந்த குழு தான் வி.சி.க.வின் அடுத்த பாய்ச்சலுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.