இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி,பிப். 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தவிட்டுப்பட்டி, தந்தை பெரியார் நகரில் இல்லத்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியை பள்ளி தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பெண்களிடம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறியதோடு குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்தார். மக்களின் வரிப்பணம் ஒரு ரூபாயில் 26 காசுகளை மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி கொடுக்கிறது இப்படியெல்லாம் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இதையெல்லாம் மீறி நல்லாட்சியை தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இதனை நீங்கள் மட்டும் தெரிந்து கொள்ள போதாது மற்றவர்களுக்கும் எடுத்து கூறி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். மேலும் ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் என்று கூறினார். அப்போது அமைச்சரிடம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பயனுள்ளதாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்தனர். வீடு வீடாக சென்ற அமைச்சருக்கு இல்லங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அமைச்சருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.