பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசாமிக்கு துடைப்பக்கட்டை அடி
திருச்சி, பிப். 29 திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் நேற்று இரவு குடும்பத்துடன் உறங்கிகொண்டிருந்த பெண்ணின் அருகிலேயே படுத்துக்கொண்ட நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மணப்பாறை பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி போன்றவற்றை விற்பனை செய்து வரும் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தை, கணவருடன் நேற்று இரவு பேருந்து நிலையத்திலேயே உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருநபர், அந்த பெண்ணின் அருகில் படுத்துள்ளார். பின் மெதுமெதுவாக பெண் போர்த்திருந்த போர்வைக்குல் கையை நுழைத்துக்கொண்டு சில்மிஷத்தை தொடங்கியுள்ளார். தனது கைக்குழந்தை தான் தன்னிடம் உரசிக்கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருந்த அந்த பெண், அந்த நபரின் எல்லைமீறி சில்மிஷத்தை தொடர்ந்து விழித்துக்கொண்டார். பின், அருகிலிருந்த துடைப்பத்தால் அந்த நபருக்கு அர்ச்சனை தான். பெண்ணின் கூச்சல் கேட்டு விழித்துக்கொண்ட கணவரும் அந்த நபரை தன் பங்குக்கு அடித்து விரட்டியுள்ளார்.
அந்த நபர், எப்போதும் தன்னை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரை போல பகலில் பாவனை செய்து கொள்வதும், இரவில் பேருந்து நிலையத்தில் உறங்கும் கூலித்தொழில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், மது பிரியர்கள் மயக்கத்தில் கிடந்தால், அவர்களின் உடைமைகள் அபேஸ் செய்வதும் வாடிக்கையாக வைத்திருப்பதாக பேருந்து நிலைய வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தகவலறிந்துள்ள மணப்பாறை போலீஸார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.