வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
திருச்சி, மார்ச் 30 தொட்டியம் அருகே வழிப்பறி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் பிடிக்க விரட்டி சென்றபோது பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கால் எலும்பு முறிந்தது .
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காடுவெட்டி பகுதியில் டீ கடையில் வேலை பார்த்து வரும் சுப்பிரமணியன் (54) என்பவர் மீன் வாங்குவதற்காக மாயனூருக்கு தனது மொபட்டில் நேற்று சென்றுள்ளார். அப்போது காட்டுப்புத்தூர் – மாயனூர் செல்லும் சாலையில் சீலைபிள்ளையார் புத்தூர் வாழை தோப்பு அருகே இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்தி சென்றபோது, அங்கு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் வண்டியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து சுப்பிரமணியன் கழுத்தில் வைத்து மிரட்டி வெட்டு சங்கரான என்னை கண்டால் போலீசாரே பயந்து விடுவார்கள் எனக்கூறி அவர் அணிந்திருந்த அரைபவுன் கைச்செயின், பணம் ரூ1,300 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து சுப்பிரமணியன் காட்டுப்புத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மேற்பார்வையில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சீலைப்பிள்ளையார் புத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆணைக்கல் பட்டி உப்பாற்று பாலம் அருகில் போலீசார் நிற்பதை கண்டதும் வாலிபர் ஒருவர் மொபட்டை நிறுத்திவிட்டு ஓடி உள்ளார். இதனை கண்ட போலீசார் வாலிபரை துரத்திச் சென்றனர்.அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க உப்பாற்று பாலத்தில் இருந்து வாலிபர் கீழே குதித்துள்ளார். இதில் வாலிபருக்கு வலது காலில் எலும்பு முறிவும், இடது கையில் பலத்த காயமும் ஏற்பட்டது.இதைடுத்து போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை செய்ததில் ரவுடி வெட்டு சங்கர் என்பதும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது சுப்ரமணியனை வழிமறித்து பணத்தை கொள்ளை அடித்து சென்றவர் என்பதும் உறுதியானது.
வாலிபர் வெட்டு சங்கரை கைது செய்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் ரவுடி சங்கர் அனுமதிக்கப்பட்டார்.தொட்டியம் அருகே பல்வேறு வழிபறி குற்றசம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி சங்கர் போலீசாரை கண்டதும் பாலத்தில் இருந்து குதித்ததில் பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.