மதவாத பா.ஜ.க.வை அகற்ற இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்: அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்
திருச்சி, ஏப். 5 மதவாத பா.ஜ.க.வை அகற்ற இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் செய்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என் அருண் நேருவை ஆதரித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பேசுகையில், திருச்சிக்கு என்ன திட்டங்கள் இருக்கின்றதோ, அனைத்து திட்டங்களும் லால்குடிக்கும் வரவேண்டும் என நான் பாடுபட்டு வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்த போதும், தற்போது தளபதி முதல்வராக இருக்கும் போதும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளைப் போல அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் லால்குடி பகுதியில் செயல்படுத்தப்படவில்லை..
பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்தார்களே தவிர எந்த ஒரு திட்டமும் அவர்களுடைய காலத்தில் இங்கு கொண்டு வரப்படவில்லை. லால்குடியில் இருந்து சிதம்பரம் வரை புதிய பாதை செல்கிறது அதேபோல சென்னை சாலையிலிருந்து நேரடியாக புதுக்கோட்டையை இணைக்கும் வகையில் மணக்கால் வழியாக புதிய சாலை அமைய இருக்கிறது. அதற்கான நில அளவை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய சாலை அமைந்தால் தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் பெருகும். லால்குடி எப்படி நகரமாக மாறி இருக்கிறதோ, அதேபோல் மணக்கால் முழுவதும் நகரமாக மாற வாய்ப்பு கிடைக்கும். ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து எந்த ஒரு நிதியும் தமிழ்நாடு அரசிற்கு வழங்குவதில்லை. அதனால்தான் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என நம்முடைய முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கும் போது பா.ஜ.க. தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். 400 இடங்களை கைப்பற்றுவார்கள் என்று என்று சொல்லி ஒரு மாயையை ஏற்படுத்தினார். ஆனால் தற்போதுள்ள நிலையில் பா.ஜ.க. 150 இடத்திற்கு மேல் வெற்றி பெற முடியாது. இந்திய கூட்டணி தான் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரும் என்ற நிலைமை உள்ளது. சிறுபான்மையினர் மக்களுடன் நாங்கள் அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறோம். மத அரசியல் செய்து நம்மிடம் பிளவுப்படுத்தி நாட்டையே தூண்டாட நினைக்கும் பா.ஜ.க அரசு அகற்ற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அருண் நேருவை வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக வேட்பாளர் அருண்நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அருண்நேரு கேக்வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
பிரச்சாரத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற் றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர் கள், கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மதிமுக நிர்வாகிகள், விசிக நிர்வாகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், சிபிஎம் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.