வயிற்று வலியால் அவதி: பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி, ஏப்.10 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கண்ணாக்குடியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் கடந்த 8 ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
லால்குடி அருகே கண்ணாக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வானை(44). இவருடைய கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவரையும் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு படிக்க வைத்து வந்துள்ளார்.மேலும் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. கடந்த 8 ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கணவர் இறந்த நிலையில் சிரமப்பட்டு தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்த தாயும் தனது குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.