சாலையை பெயர்த்து குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியில் காவிரி குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சிப்காட் பகுதிக்கு கொண்டு காவிரி குடிநீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலையை பெயர்த்து குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் புதிதாக இப்போது தான் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலை ஓரத்தில் குழி அமைத்து குழாய் கொண்டு சென்றால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு சாலையை பறித்தே குழாய் போடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை பெயர்த்து குழாய் அமைக்க கூடாது என்றும், சாலையோரத்தில் குழி போட்டு குழாய் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறிய நிலையில் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.