ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெறக் கோரி திருச்சியில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

0 322
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1 ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

அதன்படி ஜூலை 1 முதல் 8 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்துள்ளனர். மேலும் இன்று தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் (ஜாக்) பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தார்கள். சங்க செயலாளர் சுகுமார், துணை தலைவர் மதியழகன், இணை செயலாளர் சந்தோஷ் குமார், முல்லை சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டினி போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, ராஜலட்சுமி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, முத்துகிருஷ்ணன் மற்றும் குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் முல்லை, சுரேஷ் மற்றும் வாக்குரைஞர்கள் செந்தில்நாதன், மகேஸ்வரி வையாபுரி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. நாளை நீதிமன்ற வாயில் முன்பு புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் 3 ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும். வருகிற 8 ஆம் தேதி ஒன்றிய ,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.