கல்குவாரியை அகற்ற கோரி கிராம மக்கள் மனு
திருச்சி, ஜூலை 2 மணப்பாறை அடுத்த அமயபுரம் அருகே கருமகவுண்டன்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அமயபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு அருகே பாதுகாப்பற்ற முறையில் 24மணி நேரமும் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் அடிக்கடி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், இப்பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதன் அருகே இயங்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு கிராம மக்களின் நலனை காக்க கல் குவாரி இயக்கத்தை தடுத்து நிறுத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ர. ராஜலட்சுமி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.