சாக்கு முட்டையில் சடலம் கிடப்பதாக பரவிய தகவலால் பரபரப்பு
மணப்பாறை அருகே சாக்கு முட்டையில் சடலம் கிடப்பதாக பரவிய தகவலால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறைபட்டியை அடுத்த முள்ளிப்பாடி கரடு பகுதியில் கற்குவியலுக்கு மேல் ஒரு நைலான் சாக்கு பை ரத்தக்கரை படிந்த நிலையில் கட்டப்பட்டு மூட்டையாக கிடந்துள்ளது. அதில் இருந்து துர் நாற்றம் வரவே சடலத்தை பையில் கட்டி போடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து வையம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கட்டப்பட்டிருந்த மூட்டையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் இறந்த நிலையில் நாய் ஒன்று இருந்தது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. பரபரப்பை ஏற்படுத்திய நாயின் சடலம் அதே பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.