ரயில் விபத்து மீட்பு நடவடிக்கை ஒத்திகை
திருச்சி, ஆக.23 ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி குட் ஷெட் யார்டில் நடைபெற்றது
இந்தியாவின் மிகப்பெரிய துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்களுடைய பயணத்திற்காக ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக எப்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி ரெயில்வே குட்செட் யார்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு ஏசி பெட்டி மற்றும் 2 பொது ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டது
இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.
உடனே திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேன் உள்ளிட்டவை
குட் ஷெட்டு யார்டுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் திருச்சி ரயில்வே துறையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், தொழில்நுட்ப துறையினர், காவல் துறையினர் என 250க்கும் மேற்பட்டோர் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனர்.
விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்பது, உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது. ரயில் விபத்து நடைபெறும் இடத்தை போலவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.
இதனால் திருச்சி குட் ஷெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.