பாரத சாரண இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணிக்கான ஆலோசனை
திருச்சி,நவ.11 திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி, மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், பெருந்திரளனி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என். நேரு பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, தமிழ் நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணைத் தலைவருக்கான ஸ்கார்ஃப்பை அமைச்சர் நேருவுக்கு அணிவித்து சிறப்பித்தார்.
தொடர்ந்து, பெருந்திரளணி நிகழ்வைத் திட்டமிடுதல், திறம்பட நடத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பெருந்திரளணி நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் பகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளன.
இதில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாடு முழுவதும், இருந்து திரளான பாரத சாரண, சாரணியர் இயக்கத்தினர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.