லால்குடி பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்டம், லால்குடி பஸ் ஸ்டாண்டுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் ஸ்டாண்டில் வெடி குண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள் கிழமை காலை 11. 30 மணியளவில் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, காவல்துறையினர், தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், திருச்சியில் இருந்து வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களை லால்குடி பஸ் ஸ்டாண்ட் உள்ளே வராமல், லால்குடி ரவுண்டானா பகுதியில் தடுத்து நிறுத்தி, அங்கு பயணிகளை இறக்கி விட்டும், ஏற்றிக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களை, ரவுண்டானா பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பிரபு மற்றும் வீரர்கள், போலீசார் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள், ஹோட்டல், டீ கடைகள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
நேரம் காப்பாளர் அறை, பயணிகள் நிழற்குடையில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல், திருச்சி எஸ்பி செல்வநாகரெத்தினம் உத்தரவின் பேரில் லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியின் செல்போன் எண்ணின் சிக்னலை கொண்டு வெடிகுண்டு் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.