கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
திருச்சி, ஏப்.14 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேலு (46). இவர் நேற்று முன்தினம் அதிகாலை மணப்பாறைக்கு சொந்த வேலையாக சென்று கொண்டிருந்தபோது ஊரில் உள்ள கருப்பசாமி கோவிலில் சத்தம் கேட்டுள்ளது. அதிகாலையில் கோவிலில் சத்தம் கேட்கிறது என்று சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் கோவிலின் உண்டியலை உடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அருகில் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தொப்பம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (40) என்பவர் மற்றும் அவருடன் ஒரு 17 வயது இளம் சிறார் இருவரும் சேர்ந்து உண்டியலை உடைத்தது தெரியவந்தது. உடனடியாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் உண்டியலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 5180 பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.