மணப்பாறையில் கந்தூரி விழாவில் 20 ஆயிரம் பேருக்கு தயாரான உணவு

0 20
Stalin trichy visit

திருச்சி, செப்.14 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில், நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு ஊர் கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முகம்மதியா பள்ளிவாசல் வளாகத்தில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சிறப்பு துஆ ஓதப்பட்ட பின் அடுப்பு பற்ற வைக்கப்பட்டு சமையல் பணி தொடங்கியது.

தொடர்ந்து 3,400 கிலோ அரிசியில் 64 வட்டாக்களில் உணவு தயாரிக்கப்பட்டது. இதற்காக 1,300 கிலோ கத்தரிக்காய், 850 கிலோ பெரிய வெங்காயம், 900 கிலோ தக்காளி, தலா 250 கிலோ இஞ்சி, 250 கிலோ பூண்டு ஆகியவை பயன்படுத்தப்பட்டது. இந்த பணி இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது.

பின்னர் நேற்று காலை 6 மணி முதல் உணவு வழங்கப்பட்டது. இதை மணப்பாறை மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச் சென்றனர். சாதி, மதத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவை வழங்கியது சமூகநல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கந்தூரி விழாவிற்கான ஏற்பாடுகளை மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், மணப்பாறை கபரஸ்தான் பள்ளி நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய இளைஞர் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து செய்திருந்தனர்.

முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு நபிகள் நாயகம் பெயரால் சிறப்பு மவ்லூது சரிப் ஓதப்பட்டு மழை வேண்டியும் மக்களின் அடிப்படை அனைத்து தேவைகள் பூர்த்தியாக சிறப்பு துவா செய்யப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.