தொட்டியம் கூட்டுறவு வங்கியில் மோசடி புகார் : வாடிக்கையாளர்கள் முற்றுகை
திருச்சி, ஜூன் 25 திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் செயல்பட்டு வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகை மற்றும் வைப்புத்தொகை பணத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வங்கி முன்பாக வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். சில தினங்களாகவே வாடிக்கையாளரை வங்கி மேலாளர் ரவி பலமுறை அலைய விட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வைப்ப்புத்தொகை வைத்திருந்த வாடிக்கையாளர் மேலாளர் ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வங்கியின் மற்றெரு வாடிக்கையாளர் அடகு வைத்த நகையை திருப்பிக் கொடுக்காமலும், நகை கடன் கேட்டு வந்திருந்த வேறு ஒரு நபருக்கு நகையை பெற்றுக் கொண்டு கடன் தொகையை தராமல் இருந்த நிலையில் வாடிக்கையாளர்கள் மூவரும் சந்தேகமடைந்து வங்கியின் மேலாளர் ரவியிடம் விபரம் கேட்டுள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் சத்தம் போட்டு உள்ளனர். இதில் வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் பரவியது. தகவல் அறிந்த வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் வங்கியின் முன்பாக திரண்டனர். வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் தங்களது வரவு செலவு தொடர்பான விபரங்களை கேட்டுள்ளனர்.வங்கியில் இருந்தவர்கள் முறையாக பதில் கூறாத நிலையில்
பெரும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது.
நகைகடன் கேட்டு நகை வைத்தவர்களின் நகைகள் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்காமல் வெளியில் உள்ள தனியார் அடகு கடைகளில் வைத்திருப்பதாகவும், வைப்பு
தொகையில் பணம் கையாடல் செய்திருப்பதாகவும் வங்கியின் உயரதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து தங்களது அடகு வைத்த நகை மற்றும் வைப்புத் தொகையை பாதுகாப்புடன் பெற்றுத் தர வேண்டும் என கூறி பொதுமக்கள் வங்கியை முறையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் திருச்சி உதவி பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் அலுவலர்கள் வங்கிக்கு நேரில் வந்து விசாரணையை துவங்கியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் பல லட்சக்கணக்கான ரூபாய் கையாடல் மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி ஆவேசமடைந்தனர். இதுகுறித்து முழுமையாக பொதுமக்கள் மத்தியில் விபரம் தெரியாத நிலையில் நாளை பொதுமக்கள் வங்கிக்கு தங்கள் வரவு செலவுகளை சரிபார்க்க பெருமளவு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு மத்திய வங்கியின் தொட்டியம் கிளையில் பல லட்சம் மோசடி நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றசாட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .