சிக்கத்தம்பூர் ஏரியில் மீன்பிடி திருவிழா
திருச்சி, ஜூன் 29 திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில், கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பச்சைமலை காட்டாற்றை நீராதாராமாகக் கொண்ட 180 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியில் நீர் வற்றியதைத் தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. சிக்கத்தம்பூர், பாளையம், ஓட்டம்பட்டி, புதூர் மற்றும் சேர்வைக்காரன்பட்டி ஆகிய 5 கிராமங்களுக்கு சொந்தமான இந்த ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். அதிகாலை முதலே ஏரிக்கரையில் ஏராளமானவர்கள் திரண்டு வலை, கூடை, கச்சா, தூண்டில், தூண்டில் வலை உள்ளிட்ட பாரம்பரிய உபகரணங்களைப் பயன்படுத்தி ஆர்வமுடன் மீன்பிடித்தனர். பலருக்கு 5 கிலோ எடையிலான பெரிய மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கிராம மக்களின் ஒற்றுமையையும், பாரம்பரிய பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த மீன்பிடி திருவிழா அமைந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.