“டெண்டரில்”தான் கவனம் – வளர்ச்சியில் இல்லை: எடப்பாடி பழனிச்சாமி மீது அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
திருச்சி, ஆக.9 எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வராக இருந்த பொழுது டெண்டர் விடுவதில் மட்டும்தான் கவனம் செலுத்தி கொண்டு இருந்தாரே தவிர தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தவில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. அதனை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ முகாமை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
மக்களுக்கான மிகப்பெரிய திட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அமைந்துள்ளது.
நாட்டை காக்கும் ஸ்டாலின் தான் மாநில கல்வி கொள்கை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்விக்கு அடித்தளமிட்டு நல்ல முடிவுகளை கொடுக்க துவங்கி விட்டோம். அந்த அடித்தளத்தின் மேல் என்னென்ன செய்ய உள்ளோம் என்பதை தொலைநோக்கு பார்வையுடன் கூறி விட்டோம். தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை அலசி ஆராய்ந்து மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் மாணவர்கள் உயர்நிலையை அடைவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்த்துள்ளோம். மாணவர்கள் கனவு மட்டும் கண்டால் போதும் அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் எனக் கூறுவது தான் மாநில கல்விக் கொள்கை.
மாணவர்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம். தமிழ்நாடு இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றும் என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார் மூன்றாவது ஒரு மொழி அல்ல 22 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் எதையும் கட்டாயப்படுத்த கூடாது. தமிழ் மொழி, தமிழ்நாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டது தான் மாநிலங்களுக்கு கொள்கை.
மாநில கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். மாநில கல்விக் கொள்கையால் என்ன பயன் என்பதை ஆராய்ந்து விட்டு அதன் பின் இது குறித்து பேசலாம்.
14 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தற்பொழுது தான் அடைந்துள்ளதாக ஒன்றிய அரசே கூறியுள்ளது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் 3.12 சதவீதமாக இருந்தது அதன் பின் அ.தி.மு.க ஆட்சியில் வெகுவாக குறைந்தது மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த பொழுது பொதுப்பணி துறையையும் நெடுஞ்சாலை துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டு டெண்டர் விடுவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கவனம் செலுத்தவில்லை ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறார். விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கிறார். தமிழ்நாடு வளர்ச்சிக்கு தான் தான் காரணம் என எந்த ஒரு பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கூட பார்க்க கூடாது என்று கூறினார்.