திருச்சியில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு
திருச்சி, செப்.22 முசிறி, தொட்டியம் பகுதியில் காவிரி ஆற்றில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபாடு.
திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகிய தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் இன்று புரட்டாசி மாத மஹாளய அமாவாசை என்பதால் முசிறி காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் மூலம் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு வாழை இலையில் காய்கறிகள், பச்சரிசி, வாழைப்பழம், மளிகை பொருட்கள், கீரை வகைகள் ஆகியவற்றை படையல் இட்டு வழிபாடு செய்து, திதி கொடுத்து, பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இவ்வாறு செய்வதால் இறந்து போன தங்களது முன்னோர்கள் தங்களுக்கு துணையாக இருந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று விடியற்காலை முதல் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். விடிவதற்கு முன்பே பொதுமக்கள் அம்மா மண்டபம் காவிரி படித்துறை மற்றும் கருட மண்டபத்தில் அமர்ந்து முள்ளோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். நேரம் ஆக ஆக பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. குழு குழுவாக பொதுமக்கள் காவிரி படித்துறையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தார். பிறகு புனித நீராடினார்கள்.
இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மகாளய அமாவாசை தினத்தையொட்டி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். இதையடுத்து, அவர்கள் திருவரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.