முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருச்சி, அக்.10 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவர்களுக்கான கையுந்துபந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகைகளை வழங்கி பாராட்டினார்.
2025-26 ஆம் ஆண்டிற்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் 26.08.2025 முதல் 12.09.2025 வரை பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண் / பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் 32 விளையாட்டுக்கள் 37 வகைகளில் மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மாநில அளவிலான போட்டிகள் 13 மாவட்டங்களில் 02.10.2025 முதல் 14.10.2025 வரை நடைபெற்று வருகிறது.
மாவட்ட அளவிலான குழுப் போட்டிகளில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான கையுந்துபந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு, 38 மாவட்டங்களிலிருந்து 555 வீரர்கள் மற்றும் 570 வீராங்கனைகள், பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகள் 07.10.2025 முதல் 10.10.2025 வரை மாணவர்களுக்கும், 10.10.2025 முதல் 13.10.2025 வரை மாணவிகளுக்கும் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகளில் பள்ளி மாணவர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் 07.10.2025 முதல் 10.10.2025 வரை அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் சென்னை மாவட்ட அணி முதலிடமும், தஞ்சாவூர் மாவட்ட அணி இரண்டாம் இடமும் மற்றும் திருச்சி மாவட்ட அணி மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். பரிசுத்தொகை முதலிடம் தலா ரூ.75000/- வீதம் 14 நபர்களுக்கு ரூபாய் 10.50 இலட்சமும், இரண்டாமிடம் தலா ரூ.50,000/- வீதம் 14 நபர்களுக்கு ரூபாய் 7 இலட்சமும் மற்றும் மூன்றாமிடம் தலா ரூ.25000/- வீதம் 14 நபர்களுக்கு ரூபாய் 3.50 இலட்சமும் என மொத்தப் பரிசுத்தொகை ரூ.21,00,000/- SNA வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்பட உள்ளது.
இந்த போட்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று (10.10.2025) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகைகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி, பயிற்சியாளர்கள், மேலாளர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.