முசிறி அரசுப் பள்ளியில் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

0 246
Stalin trichy visit

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா – மராமத்து பணிகளை விரைந்து முடிக்க முன்னாள் மாணவர்கள் கோரிக்கை.

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் முன்னாள் மாணவர்கள், முசிறியை சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் பள்ளிக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துறை சார்ந்த அரசு துறை அலுவலர்களுக்கு ஓர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கோரிக்கையை ஏற்று கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வது, இப்பள்ளிக்கு சுமார் 40 ஏக்கர் பரப்பிலான இடத்தை தானமாக வழங்கி உதவிய முசிறி தாலுகா அய்யம்பாளையம் பண்ணையின் வாரிசுகளையும், அவரது குடும்பத்தார்களையும் அழைத்து நூற்றாண்டு விழாவில் கௌரவிக்க கேட்டுக் கொள்வது, நூற்றாண்டு விழா நினைவை போற்றும் வகையில் தனியாக ஒரு கல்வெட்டு அமைக்கவும், நூற்றாண்டு விழா காணும் இப்பள்ளியின் வரலாற்றுப் பெருமைகளை நூலாக தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்வது, நூற்றாண்டு விழாவிற்காக தமிழக அரசு ஒதுக்கி உள்ள நிதியை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பெற்று பள்ளி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய மராமத்து பணிகளை விரைந்து செய்திட வேண்டுவது, முன்னாள் மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்வது, மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை மேம்படுத்தி தரவும், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிட வசதிகளை பராமரிக்க வலியுறுத்துவது, பள்ளி வளாகத்தில் உள் விளையாட்டு கலையரங்கம் அமைத்து தர அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழா காண இருக்கும் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை செய்து தர அரசு முன்வர வேண்டும் என்பது இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.