பராமரிப்பில்லாத ஒன்றிய அரசின் மாணவர் விடுதி: துரை வைகோ எம்.பி. ஆய்வு

0 142
Stalin trichy visit

திருச்சி, அக்.27 திருச்சி, காஜாமலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள முன்னர் நேரு யுவா கேந்திரா என்று அழைக்கப்பட்ட, தற்போது மேரா யுவா பாரத் (Mera Yuva Bharat – MY Bharat) எனப்படும் அலுவலகத்தையும், அதனுடன் இணைந்த இளைஞர் விடுதியையும்  (Youth Hostel) நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நேரு யுவா கேந்திரா என்பது ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் (Ministry of Youth Affairs & Sports) கீழ் இயங்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, நாடு முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை சமூக சேவை, கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் தளமாக விளங்குகிறது.

இதனுடன் இணைந்த இளைஞர் விடுதி, 1996ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சிக்கு கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக வரும் ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த செலவில் தங்கும் வசதியை வழங்கி வந்தது.

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், இவ்விடுதி பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டு, புதர்கள் மண்டி, புழக்கமின்றி கிடக்கிறது. இந்த விடுதியை நேரில் ஆய்வு செய்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதனை புனரமைப்பதற்கு தேவையான நிதி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு பின்னர் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

இந்த இளைஞர் விடுதியை மீண்டும் புனரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவது, திருச்சியின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு சூழலை பெருமளவு மேம்படுத்தும். நாட்டின் பல நகரங்களில் உள்ள இதுபோன்ற இளைஞர் விடுதிகள், குறைந்த செலவில் தங்கும் வசதி, அறிவு மற்றும் பண்பாட்டு பரிமாற்றம், விளையாட்டு மற்றும் சமூக இணக்கத்திற்கு பங்களிப்பு செய்து வருகின்றன.

திருச்சியிலும் இதேபோன்று இவ்விடுதி மீண்டும் உயிர்பெற வேண்டும் என்பதே எனது தீவிர விருப்பமாகும்.

இதற்காக, மத்திய பொதுப்பணித்துறை (Central PWD) அதிகாரிகளிடம், இளைஞர் விடுதியை புனரமைப்பதற்கு புதிய நிதி மதிப்பீட்டை உடனடியாக தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்த மதிப்பீட்டைப் பெற்றவுடன், ஒன்றிய அமைச்சரை சந்தித்து, இதற்கான கோரிக்கையை முன்வைத்து, திருச்சி இளைஞர் விடுதியை மீட்டெடுக்க உறுதியுடன் பணியாற்றுவேன்.

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், திருச்சியில் இளைஞர் விடுதி மீண்டும் உயிர்பெற வேண்டும் என்பதே எனது இலக்கு. அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று துரை வைகோ எம்.பி. கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.