“போக்சோ” வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை : திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, அக்.27 போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை மற்றும் அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாய பணிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து கற்பழித்த வழக்கில் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்து கற்பழித்த வழக்கில் கடந்த 26.. 2. 2022 அன்று முசிறி அனைத்து மகளிர் நிலையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞராக சுமதி ஆஜராகி வாதிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திருச்சி மகளா நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா குற்றம் சாட்டப்பட்டிருந்த பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாணி மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் அம்பிகா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் பாராட்டினர்.