பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி,நவ.1 திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரையில் ரூ.81.72 கோடியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
திருச்சி மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் கட்டி திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புறவழிச்சாலை, அரை வட்ட சுற்றுச் சாலை பணிகளையும் விரைந்து முடித்து மாநகருக் குள் வாகனங்கள் வருவதை குறைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புறவழிச்சாலை தொகுப்பு 1- இல் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி விறு, விறுப்படைந்துள்ளது. கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் கிழக்கு கரை பகுதியில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த புறவழிச்சாலை அமைகிறது. பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரையில் செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதில், இரட்டைமலை கோயில் செல்வதற்காக தனி வச தியும் ஏற்படுத்தப்படுகிறது. 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த சாலையில், நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைப்பும் ஏற்படுத்தப்படு கிறது. ரூ.81.72 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி, கடந்த மே மாதம் பணிகள் தொடங்கின. உயர்மட்ட சாலைக்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருச்சி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் சு. சிவராசு, ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மேயர் மு.அன்பழகன், நகரப்பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்