மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜன.2 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணத்தை இன்று தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியின் துவக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் நெஞ்சுரத்தையும் ஸ்டாமினாவையும் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என எண்ண தோன்றுகிறது.
இளைஞர்கள் நலனுக்காகவும் எதிர்காலத்தின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.தன் தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக உழைத்து இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர் சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர் அப்படிப்பட்ட திராவிட பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான் வைகோ அவர்கள். நானும் அந்த திராவிட பல்கலைக்கழக மாணவன் தான்.
சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார். நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள். காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும். இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவம் பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.