திருவெறும்பூரில் மக்கள் பணி தொடரும் : அன்பில்மகேஸ் பொய்யாமொழி
திருச்சி, மே 5 திருவெறும்பூரில் எனது மக்கள் பணி தொடரும் என அமைச்சரும், திருவெறும்பூரில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டப் பேரவை உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப் போவதில்லை. எப்போதும்போல எனது தாய் வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி. திராவிடமாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவுக்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் எனது மக்கள் பணி என்றும் தொடரும் என தெரிவித்துள்ளார்.