மணப்பாறை அருகே செபஸ்தியார் கோவில் திருவிழா : 750 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, 150 கிலோ கோழிக்கறி சமைத்து சமபந்தி அன்னதானம்
திருச்சி, ஜன.23 மணப்பாறை அருகே செபஸ்தியார் ஆலயத்தில் 750 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, 150 கிலோ கோழிக்கறி சமைத்து மெகாவிருந்து. ஜாதி, மதம் கடந்து நடந்த மகத்துவமிக்க சமபந்தி விருந்து. மாலை முதல் இரவு வரை நடந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 ம் தேதி இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது நடைபெறும் அன்னதானம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.
இந்த ஆலயத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர் மக்களும் வேண்டுதல் வைப்பது வழக்கம். உடல்நலத்துடன் வாழ, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற, கல்வி, வெளிநாடு செல்ல, விவசாயம், அரசு வேலை, நோய் தீர வேண்டும் இப்படியாக பல்வேறு வேண்டுதல்களை வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டால் தாங்கள் வேண்டிக்கொண்டதைப்போல் ஆட்டுக்கிடாய், கோழி, கன்றுக்குட்டி, அரிசி, மளிகை பொருட்கள், காய்கனி, தண்ணீர் பாட்டில், இலை உள்ளிட்ட அன்னதானத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அப்படி வேண்டுதல் வைத்து நிறைவேறிய மக்களால் வழங்கப்படும் பொருட்களை வைத்து சமபந்தி அன்னதானம் நடைபெறும்.
இதே போல் இந்த ஆண்டும் நடைபெற்ற திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை திருப்பலி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறிய மக்கள் தாங்கள் கொண்டுவந்த ஆடுகளுடன் தப்பாட்டத்துடன் ஊர்வலமாக ஆலயத்திற்குச் சென்றனர். பங்குத்தந்தை ஜான்கிறிஸ்டோபர் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு புனித நீர் தெளித்தார். புனித நீர் தெளிக்கப்பட்ட பின்பு ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அடுப்பு பற்ற வைக்கப்பட்டு சமபந்தி அன்னதான நிகழ்விற்கான பணிகள் தொடங்கியது.
ஆட்டுக்கிடாய்களை அறுத்து கறியை தயார் செய்வது ஒருபுறம், கோழியை அறுத்து அதை தயார் செய்யும் பணி மறுபுறம், காய்கறிகளை நறுக்குவது, சாதம் வடிப்பது உள்ளிட்ட சமபந்தி அன்னதானத்திற்கான பணிகளை காலையில் இருந்து மாலை வரை நடைபெற்றது. பல்வேறு மக்கள் கொடுத்த அரிசி, ஆடு மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து சமையல் தயாரானது. 750 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, 150 கிலோ கோழிக்கறி என அசைவ விருந்து தயாரான பின்பு இரவு சமபந்தி அன்னதானம் ஆலயத்தில் முன்பு உள்ள திடலில் தொடங்கியது.
பங்குத்தந்தை ஜான் கிறிஸ்டோபர் திருப்பலி நிறைவேற்றிய பின்பு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு உணவு பரிமாறினர். ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து அடுத்தடுத்த பந்தியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுச் சென்றனர்.
இந்த பந்தியில் ஜாதி மத இன மொழி பேதமின்றி சமத்துவம், சகோதரத்துவத்தையும் மேம்படுத்திடும் வகையில் மகவத்துவமிக்க பணியாக அமைந்தது. வேண்டுதலுக்காக ஆலயத்திற்கு வழங்கப்பட்ட 5 பசுங்கன்றுகள் நாளை ஏலம் விடப்பட உள்ளது. ஜாதி மதம் கடந்து நடந்த இந்த சமபந்தி அன்னதான நிகழ்வு அனைவரையும் நெகிழ வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.