மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் வேளாண் மாணவர்களின் செய்முறை விளக்கம்

0 146
Stalin trichy visit

மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் வேளாண் மாணவர்களின் செய்முறை விளக்கம் – விவசாயிகளுக்கு வளையத் தழைக்கூளம், நுண்நீர் பிடிப்பு மற்றும் இயற்கை கரைசல் பயிற்சி.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மும்முடி சோழமங்கலம் கிராமத்தில், தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்பகுதி விவசாயிகளுக்காக செய்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், தென்னை மற்றும் தோட்டப் பயிர்களில் வளையத் தழைக்கூளம் அமைக்கும் முறை, மழைநீரை சேமித்து நிலத்தடிநீரை உயர்த்தும் நுண்நீர் பிடிப்பு முறை, மேலும் பயிர் வளர்ச்சிக்கும் மண் வள மேம்பாட்டிற்கும் உதவும் EM கரைசல் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து நேரடியாக செய்து காட்டி விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
மாணவர்கள், வளையத் தழைக்கூளம் அமைப்பதால் மண்ணில் ஈரப்பதம் நீடித்து நிலைத்திருப்பது, களைகள் கட்டுப்படுவது, மண் வெப்பம் குறைவது மற்றும் வேர் வளர்ச்சி மேம்படுவது குறித்து எடுத்துரைத்தனர். நுண்நீர் பிடிப்பு முறையின் மூலம் மழைநீர் வீணாகாமல் நிலத்தில் உறிஞ்சப்பட்டு, நீர்ப்பாசன தேவையை குறைக்க முடியும் என்றும் விளக்கினர். EM கரைசல் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நன்மை நுண்ணுயிர்கள் அதிகரித்து, பயிர்களின் வளர்ச்சி வேகம் உயரும், நோய் எதிர்ப்பு திறன் மேம்படும் என்றும் கூறினர்.
மேலும், குறைந்த செலவில் இயற்கை முறையில் சாகுபடி செய்வது, ரசாயன உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைப்பது, விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தை உயர்த்துவது போன்ற நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதனை விவசாயிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்து, சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றனர்.
இந்த செய்முறை விளக்கத்தை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்களான
அகமது இஸ்மாயில்.அ, அன்புசெல்வன்.நீ, அர்ச்சுதன்.பி, அருண்குமார்.அ, பாலாஜி.செ, தனுஷ் ராஜ்.ச, தாரணி.தா, தருண்.தி, பிரான்சிஸ் சேவியர்.ஏ, கோகுல்.ஏ ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்விற்கு செல்வி ரா. பிரியங்கா (உதவி பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் – வேளாண்மை விரிவாக்கத் துறை),
திரு மு. அப்துல் ரஹ்மான் (உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை),
திருமதி சு. சுகுணா (உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – பயிர் நோயியல் துறை) ஆகியோர் வழிகாட்டுதல் வழங்கினர்.
இந்த முயற்சி, கிராமப்புற விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, நீர் மேலாண்மை மற்றும் மண் வள பாதுகாப்பில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.