வாழை மரத்தண்டு அந்துப்பூச்சி கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்

0 129
Stalin trichy visit

வாழை மரத்தண்டு அந்துப்பூச்சி கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் கிராமத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள்,ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் அப்பகுதி விவசாயிகளுக்காக வாழை மரத்தண்டு அந்துப்பூச்சி கட்டுப்பாடு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர்.
வாழை பயிரில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் மரத்தண்டு அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த எளிய மற்றும் குறைந்த செலவிலான முறையாக,வாழை மரத்தண்டை இரண்டாகப் பிளந்து, அதை வயலில் ஒரு ஓரமாக வைப்பது குறித்து மாணவர்கள் நேரடியாக செய்து காட்டினர். மரத்தண்டின் உள்ளிருக்கும் ஈரப்பதம் மற்றும் மணத்தால் அந்துப்பூச்சிகள் ஈர்க்கப்பட்டு, அவை அந்த துண்டுகளில் திரண்டு சேரும். இதன் மூலம் மற்ற ஆரோக்கியமான வாழை மரங்களை தாக்காமல் பாதுகாக்க முடியும் என விளக்கமளித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட தண்டுகளை முறையாக அகற்றுதல், வயல் சுத்தமாக வைத்தல், முறையான நீர்ப்பாசனம், இயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துதல் போன்ற ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளும் எடுத்துரைக்கப்பட்டன. இதனால் ரசாயன மருந்துகளின் பயன்பாடு குறைந்து, செலவு சிக்கனமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும் என கூறப்பட்டது.
இந்த செயல்முறை விளக்கத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். குறிப்பாக, பூச்சி தாக்கத்தை ஆரம்ப நிலையில் கண்டறிதல், காலமுறை கண்காணிப்பு மேற்கொள்வது போன்ற நடைமுறை அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்களான அகமது இஸ்மாயில்.அ, அன்புசெல்வன்.நீ, அர்ச்சுதன்.பி, அருண்குமார்.அ, பாலாஜி.செ, தனுஷ் ராஜ்.ச, தரணி.தா, தருண்.தி, பிரான்சிஸ் சேவியர்.எ, கோகுல்.ஏ ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.

இந்நிகழ்விற்கு செல்வி ரா. பிரியங்கா (உதவி பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் – வேளாண்மை விரிவாக்கத் துறை), மு. அப்துல் ரஹ்மான் (உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை), சு. சுகுணா (உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – பயிர் நோயியல் துறை) ஆகியோர் வழிகாட்டுதல் வழங்கினர். இந்த முயற்சி, பூவாளூர் கிராம விவசாயிகளுக்கு வாழை பயிர் பாதுகாப்பில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உதவும் எனவும் விவசாயிகள் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.