ஆக்கிரமிப்புகளால் வியாபாரம் பாதிப்பு : கடைகளை அடைத்து போராட்டம் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை
திருச்சி நவ 5 தீபாவளி பண்டிகை கால ஆக்கிரமிப்புகளால் திருச்சியின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வரும் நவம்பர் 7ஆம் தேதி என்.எஸ்.பி. சாலையில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து, சுமார் 10,000 வணிகர்களுடன் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரித்துள்ளது.
திருச்சி அண்ணாமலை நகர், புதிய கரூர் பை-பாஸ் ரோடு, ஆக்ஸினா டவரில் உள்ள திருச்சி மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் விரிவாகக் கூறியதாவது:
மீண்டும் உருவான ஆக்கிரமிப்புகள்:
2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், திருச்சியின் இதயம் போன்ற பகுதிகளான என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம், நந்திகோவில் தெரு, சின்னக்கடை வீதி, தேரடி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, என்.எஸ்.பி. ரோடு உள்ளிட்ட பகுதிகள் ‘விற்பனை இல்லாத பகுதி’ என அறிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த தரைக்கடைகள், நடைபாதைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன.
சிறிது காலம் இந்த நிலை பாதுகாக்கப்பட்ட போதிலும், தற்போது தீபாவளி பண்டிகைக் காலம் தொடங்கியதை முன்னிட்டு, மீண்டும் புதுப்புது ஆக்கிரமிப்புகளால் பழைய அவல நிலையே உருவாகிவிட்டது. வணிக நிறுவனங்களின் வாசல்களை மறைத்தும், நடைபாதைகளை ஆக்கிரமித்தும் கடைகள் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
30% குறைந்த வர்த்தகம்:
பண்டிகைக் காலங்களில் திருச்சியின் இதயப் பகுதியான என்.எஸ்.பி. ரோடு மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் ‘குட்டித் தீவு’ போல தரைக்கடைகள் முளைத்து விடுகின்றன. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள ‘சாரதாஸ்’ போன்ற பெரு நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை அனைத்துத் தரப்பு வணிகர்களின் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சுமார் 30 சதவீதம் வரை தலைகீழாகக் குறைந்துபோய் வணிகர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு மாற்றுத் திட்டம்:
ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் இந்தத் தொல்லை தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர மாற்றுத் தீர்வாக, தீபாவளி போன்ற விழா காலங்களில் அருகில் உள்ள கல்லூரிகளின் மைதானங்களை தரைக்கடைகளுக்கென பிரத்யேக இடமாக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தர வேண்டும். அங்கு தரைக்கடை வியாபாரிகளை தற்காலிகமாக மாற்றம் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. அதே நேரத்தில் என்.எஸ்.பி. ரோட்டில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. இதற்கான உரிய முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வரும் நவம்பர் 7ஆம் தேதி என்.எஸ்.பி. சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் முழுமையாக மூடிவிட்டு
வணிகர்கள் ஊழியர்கள் என 10,000 பேரை திரட்டி மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வெ.கோவிந்தராஜுலு எச்சரித்துள்ளார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் வி. ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன் திருச்சி மாநகர செயலாளர் வி.பி.ஆறுமுகபெருமாள், திருச்சி மாவட்ட பொருளாளர் வெங்காய மண்டி தங்கராஜ்,இளைஞர் அணி அப்துல் ஹக்கீம், திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்