மணப்பாறையில் காங்கிரஸ் எம்.பி. எதிராக பா.ஜ.க.வினர் கோசம்
திருச்சி, மார்ச் 2 மணப்பாறையில் ரூ.5.11 கோடியில் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலைய திறப்பு விழாவில் பரபரப்பு காங்கிரஸ் எம்.பிக்கு எதிராக கோசங்கள் எழுப்பிய பாஜகவினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ரெயில் நிலையத்தை ரூ. 5.11 கோடி மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ரெயில்நிலையத்தை காணொலி காட்சி மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கலந்து கொண்டு அங்கிருந்த கல்வெட்டை திறந்து வைக்கவே அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து அவருக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினர். பிரதமர் திறந்து வைத்து விட்டார். மீண்டும் ஏன் அதை திறக்க வேண்டும் என்று கூறி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து மேடைக்கு சென்று காங்கிரஸ் எம்.பி. தன்னுடைய முயற்சியில் தான் இந்த பணிகள் நடைபெற்றதாக கூறியதை அடுத்து அதற்கும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை பேசவிடாமல் தொடர்ந்து அவருக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். இருப்பினும் பேசிய அவர் இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவது இல்லை என்று கூறி உரையை தொடர்ந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை பாஜகவினர் முற்றுகையிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஜோதிமணியை காருக்குள் ஏற்றி அனுப்பினர். இருப்பினும் காரை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பாஜகவினர் மீண்டும் அந்த கல்வெட்டை அவர்களாகவே திறந்தனர்.