பொன்மலை ஜி.கார்னர் பகுதியில் சுழற்பாதை அமைக்க ரயில்வே வாரியம் தடையில்லா சான்று : துரை வைகோ எம்.பி தகவல்

0 164
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16 பொன்மலை ஜி.கார்னர் பகுதியில் சுழற்பாதை அமைக்க ரயில்வே வாரியம் தடையில்லா சான்று : துரை வைகோ எம்.பி தகவல். இதுகுறித்து துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளதாவது,

நல்ல நோக்கத்திற்காக உளப்பூர்வமாய் ஒரு அடியை நாம் எடுத்து வைத்தால், அந்த இலக்கும் நம்மை நோக்கி நகர்ந்து வரும் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

அப்படித்தான், திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி பொன்மலைப்பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டேன் என்று சொல்வதைவிட, தீவிரமாக போராடினேன்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்ட வேண்டிய பாலம் என்றாலும், இடம் இரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இத்தனை ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்தேன்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் பாலம் கட்ட ஒப்புதல் பெற்றேன், இப்போது இரயில்வே அமைச்சகத்திடமிருந்து அவர்களின் நிலத்தில் கட்டிக்கொள்ள தடையில்லா சான்றையும் கடந்த 13.03.2026 கிடைக்கப்பெற்றோம்.

அதனால், நூற்றுகணக்கான உயிர்களை காவு வாங்கிய பகுதியில் உயர்மட்ட சுழற் சாலை அமையப்போவது உறுதியானது! திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு விடியல் கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழல் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து தடையில்லா சான்றிதழை வழங்கி எனது தொடர் முயற்சிக்கு மகுடம் சூட்டியது! சென்னையில் இருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட ஜி கார்னர் சுழற் பாலம் ஓர் சாதனையாக எனக்கு நிறைவை தருகிறது என்று நான் நேற்று பதிவிட்டேன்.

இந்த நல்ல தருணத்தில், இன்று (16.03.2026) காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள இரயில்வே அமைச்சரின் அலுவலகத்தில், ஒன்றிய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்களை சந்தித்து, மின்னும் பொன்னாடை அணிவித்து, தித்திக்கும் இனிப்பு பலகாரங்களை வழங்கி, திருச்சி பொன்மலைப்பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க இரயில்வே நிலத்தை பயன்படுத்திக்கொள்ள தடையில்லா சான்றை வழங்கி, எனது திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கைக்கு நல்ல தீர்வை வழங்கியமைக்கும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் தமிழ்நாட்டு மக்களின் பயண பாதுகாப்பை உறுதி செய்தமைக்கும் எனது திருச்சி மக்களின் சார்பிலும், அனைத்து தமிழ் மக்களின் சார்பிலும் எனது கோடான கோடி நன்றிகளை இதயப்பூர்வமாய் தெரிவித்துக்கொண்டேன்.

அத்தனையும் ஏற்றுக்கொண்டு அமைச்சர் “இது உங்கள் இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி; வாழ்த்துகள்” என்றார். அகமகிழ்ந்து அதனை ஏற்றுக்கொண்டேன்.

எனது ஒவ்வொரு முயற்சியும், அதனால் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கானது என்பதில்தான் என் மகிழ்ச்சி பொதிந்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.