குறுவை சாகுபடி பாதிப்பு: ஏக்கருக்கு ₹40,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜீன் 19 குறுவை சாகுபடி பாதிப்பு: ஏக்கருக்கு ₹40,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போய்விட்டதாக தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 6 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த ஆண்டு கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். தமிழக முதலமைச்சர் இரண்டு முறை டெல்லி சென்றிருந்தும், பாரத பிரதமரையோ அல்லது கூட்டணி கட்சித் தலைவர் ராகுல் காந்தியையோ சந்தித்து காவேரி தண்ணீர் குறித்து பேசவில்லை என்றும், இதனால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது தீர்மானத்திற்கு வரவேற்பு அதே வேளையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் முழுமையாக வரவேற்பதாகவும், இதற்காக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் விஸ்வநாதன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள 75,000 ரூபாய் முழு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு போதுமானதல்ல என்றார். தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி என்று கூறப்பட்டதை நினைவூட்டிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தைப் போல தமிழகத்திலும் சிறுகுறு விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதில் பெரிய விவசாயி, சிறிய விவசாயி என்று பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் உறுதி செய்ய வேண்டும் மேலும், குறுவைத் பயிர்களைத் தொடர்ந்து வரும் சம்பா சாகுபடிக்காவது மாதாந்திரப் பங்கான 127.25 டி.எம்.சி தண்ணீரை தங்கு தடையின்றிப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சரிடமோ, காவேரி மேலாண்மை வாரியத்திடமோ அல்லது மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமோ பேசி, மாதம் தோறும் தமிழகத்திற்குரிய தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும் என சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.