சிறுகனூர் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 28 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் பணம் கொள்ளை: பொதுமக்கள் அச்சம்
திருச்சி, ஜூன் 20 திருச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 28 பவுன் நகை, ₹1.60 லட்சம் பணம் கொள்ளை: 10 நாட்களில் 9 வீடுகளில் கைவரிசை காட்டிய திருடர்கள் – திருடர்களுக்கு போலீசார் வலை வீச்சு
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து, 28 பவுன் தங்க நகைகள் மற்றும் ₹1.60 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் வலை வீசி தேடி வருகின்றனர்.
பூட்டிய வீடுகளைக் குறிவைத்த கொள்ளையர்கள் சிறுகனூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 80). இவரது கணவர் முத்துக் கிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், சகுந்தலா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் அவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், சகுந்தலாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ₹1.30 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
அதே தெருவில், சகுந்தலாவின் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி வசிப்பவர் நடராஜன் (வயது 70), த/பெ சின்னசாமி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவரது வீட்டையும் நோட்டமிட்ட கொள்ளையர்கள், கதவை உடைத்து உள்ளே நுழைந்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ₹20000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு பெரும் கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
மோப்ப நாய் ‘நிலா’ மற்றும் கைரேகை நிபுணர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுகனூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், ‘நிலா’ என்ற மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிய நாய், யாரையும் கவ்விப் பிடிக்காமல் அப்படியே நின்றுவிட்டது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி
சிறுகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 9 வீடுகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கொள்ளையர்களின் இந்தத் தொடர் கைவரிசை காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: “தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்தும், காவல்துறையினர் இதுவரை கொள்ளையர்களைக் கைது செய்யாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, பொதுமக்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.