குடிநீர் தட்டுப்பாடு, கூடுதல் பேருந்து வசதி கேட்டு இருங்களூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜூன் 23 குடிநீர் தட்டுப்பாடு, கூடுதல் பேருந்து வசதி வேண்டி இருங்களூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இருங்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்புகள் (குடிசை மாற்று வாரியம்) அமைந்துள்ளன. இங்குள்ள சுமார் 778 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்பகுதி வழியாகக் காலை மற்றும் மாலை வேளைகளில் தலா இரண்டு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று காலையும் வழக்கம்போல பேருந்து வர சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரியும், கூடுதல் பேருந்து வசதி செய்து தர வலியுறுத்தியும் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் பேசி இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர்.. அதன்பேரில், பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.