துறையூர் கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் வேதனை

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 23  திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி 1-வது வார்டு வைகறை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கலிங்கமுடையான்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குடிநீர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்று எடுத்து வருவதாகவும், அந்த தண்ணீரும் உப்பு தண்ணீர் எனவும், தனியார் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிலிருந்தும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும், கடந்த ஓர் ஆண்டு காலமாக அந்த கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சார்ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், தற்போது பயன்படுத்தப்படும் நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதை குடிப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்பகுதியில் பலர் விவசாயம் மற்றும் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறிய மக்கள், பால் கேன்களை அந்த நீரில் கழுவிய பிறகும், தண்ணீரில் பால் ஊற்றி காய்ச்சுவதாலும் பால் கெட்டுவிடுவதாகவும், இதனால் பொருளாதார இழப்பும் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக குடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை தேவையான குடிநீரை வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.