மணப்பாறை அருகே அரசு மதுபான கடையை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டம்
திருச்சி, ஜூன் 26 மணப்பாறை அருகே மதுபான கடையை அகற்ற கோரி பெண்கள் கடையை திறக்கவிடாமல் தர்ணா போராட்டம். போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எலமணம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையால் அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் குடித்து விட்டு வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிப்பதாகவும் மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மதுபான கடை வழியாக செல்லும் போது குடித்து விட்டு கேலி, கிண்டல் செய்வதாகவும் கூறப்படுகிறது. போதையில் ஆபாசமாக நடந்து கொள்வதால் பெண்கள் அவ்வழியாகச் செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மதுபான கடை இருக்கும் இடத்தை கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த மதுபான கடையை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் பெண்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது மூன்று மாதத்தில் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தும் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போதைய தவெக அரசு மூடுவதாக அறிவித்த 717 கடைகளின் பட்டியலிலும் இந்த கடை சேர்க்கப்படாத நிலையில் இன்று கடையின் முன்பு திரண்ட பெண்கள் கடையை திறக்கக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுபான கடையை திறக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்திய போலீசாருடன் பொதுமக்கள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு குடிபோதையில் வரும் மகன் மற்றும் கணவர்கள் வீட்டில் உள்ள பெண்களை அடித்து துன்புறுத்துவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்த பெண்கள் அடித்து காயப்படுத்திய கையை காட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் பெண்களிடம் இருந்து கடையை அகற்றக்கோருவது குறித்த மனுவினை பெற்று விரைவில் மதுபான கடையை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் சமாதான மடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கடையை அகற்றாவிட்டால் மீண்டும் அடுத்தகட்டமாக தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.