மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்திய 3 பேர் கைது
திருச்சி, ஜூலை 6 மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை காரில் கடத்திய 3 பேர் கைது : 4 பேர் தலைமறைவு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார் ( வயது 27). மணப்பாறையில் உள்ள தனியார் பிஸ்கட் ஏஜென்சியில் வேலை பார்த்துவருகிறார். இதேபோல் முடுக்குப்பட்டியைச் சேர்ந்தவர் சித்திரை வள்ளி (வயது 26). இவர் காமராஜர் சிலை அருகில் உள்ள தனது சகோதரியின் கணவர் முருகேசன் பிளாஸ்டிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சித்திரைவள்ளி வேலை பார்த்து வரும் கடைக்கு பிஸ்கெட் கொடுக்கச் செல்லும் போது அஜீத்குமாருக்கும் சித்திரைவள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாகமாறி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சித்திரை வள்ளியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25 ம்தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வயலூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டதோடு மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்துள்ளனர். பின்னர் இருவரும் சித்தாநத்தத்தில் உள்ள அஜீத்குமார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே சித்திரை வள்ளியின் பெற்றோர் தனது மகள் வீட்டிலிருந்த 5 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணைக்காக இன்று அஜித்குமார் மற்றும் சித்திரை வள்ளி இருவரும் மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். விசாரணை முடிந்தவுடன் இருவரும் ஒரு ஆட்டோவில் சித்தாநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களை கண்காணித்த சித்திரை வள்ளியின் சகோதரர் மலைச்சாமி, அக்கா கணவர் முருகேசன் அவரது தம்பி பிரகாஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு கார்களில் சென்று மாணிக்கம் பிள்ளை சத்திரம் அடுத்த ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்த ஆட்டோவை வழிமறித்து அதிலிருந்த சித்திரைவள்ளியை காரில் கடத்தியுள்ளனர். இதனை அஜித்குமார் தடுத்தபோது அவரை கீழே தள்ளிவிட்டு காரில் கடத்திய நிலையில் அஜீத்குமார் காரை கையால் தாக்கி மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் கார் வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இச்சம்பவம் குறித்து அஜித்குமார் மணப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் விரைந்து செயல்பட்ட மணப்பாறை காவல் துறையினர் யாகபுரத்தில் அவரது பாட்டி வீட்டில் அடைத்து வைத்திருந்த சித்திரை வள்ளியை கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசார் மலைச்சாமி, முருகேசன், பிரகாஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சித்திரை வள்ளியின் தம்பி அழகர்சாமி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் உறவினர்களால் கடத்தப்பட்ட சம்பவம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.