டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த விவசாயிகள் கைது

0 19
Stalin trichy visit

திருச்சி, செப். 1  உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி
டெல்லி சென்று போராட இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது.

உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் நீர் பங்கீட்டு விகிதத்தின்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று டெல்லி சென்று போராட்டம் நடத்த இருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தமிழகம் முழுவதும் உள்ள இந்த சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகளை வீட்டு காவலில் வைத்தனர். மேலும் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்ல இருந்த விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்து, திருச்சி உறையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

இது குறித்து அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில்:-

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட உரிமை உண்டு. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் அடிமைகளாகப் பாவிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரைத் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் டெல்லி சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

எங்களைக் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த மண்டபத்தில் இருந்து நாங்கள் வெளியே செல்ல மாட்டோம்; வேண்டுமென்றால் எங்களைச் சிறையில் அடைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து விவசாயிகள் மீது காவல்துறையினர் அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.