நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் : மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
திருச்சி, செப். 1 பாதிரியார்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் உயிருக்கு ஆபத்து- நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
திருச்சி முதலியார் சத்திரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோவில் நிலத்தில் சுமார் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இதில் 110 ஆண்டுகள் ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் ஜெனிட்டா என்ற பெண்மணி, தனது நிலத்தை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆக்கிரமிப்பதாகக் கூறி காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெனிட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில்..
நாங்கள் 5 தலைமுறைகளாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தீனதயாளன் என்பவர் தற்போது கோவில் இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். ஆனால், அவர் எனக்குச் சொந்தமான இடத்தையும் சேர்த்து சட்டவிரோதமாக அபகரித்து கட்டிடம் கட்டி வருகிறார்.
தீனதயாளன் ரயில்வேயில் ஊழியராக உள்ளார். நாங்கள் குடிசை வீட்டில் ஏழ்மையான நிலையில் வாழ்வதால் எங்களை அலட்சியப்படுத்தி, பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பாதிரியார்கள் (சவரிமுத்து, டேவிட், மேத்யூ) அவர்களுக்கு முழுத் துணையாக நிற்கின்றனர். இதனை நாங்கள் தட்டிக் கேட்டபோது, எங்களை கடுமையாக மிரட்டியதோடு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனது மகளையும் தாக்கினர். இதில் காயமடைந்த எனது மகள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் தீனதயாளன் மற்றும் அவருக்குச் சாதகமாகச் செயல்படும் பாதிரியார்களால் எங்களது உயிருக்குக் ஆபத்து நிலவுகிறது. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட எங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்; எங்களது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். இதுகுறித்து 3 நாட்களுக்குள் விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.